மாற்றம் காணும் சிறிலங்கா காவல்துறை: நகர்த்தப்படும் உயர்பீடங்கள்
காவல்துறை விசேட அதிரடிப்படையின் தளபதி, காவல்துறை நிர்வாக திணைக்களத்தின் தலைவர் உட்பட காவல்துறை உயர்பீடங்கள் பல மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல், கிழக்கு, வடமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்களும் மாற்றப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மேல் மாகாணத்திற்கு அண்மித்த பிரதேசமொன்றுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள போதிலும், வடக்கின் பொதுமக்கள் அவரை அதிகம் விரும்புவதாலும், மக்களின் கோரிக்கையின் பேரில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆணைக்குழு கூட்டம்
இதேவேளை, இந்த இடமாற்றங்கள் தொடர்பில் காவல்துறையினரின் முன்மொழிவுகளை பதில் காவல்துறை மா அதிபர் ஏற்கனவே தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு சிபாரிசு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தேசிய காவல்துறை ஆணைக்குழு கூட்டத்தில் இன்று (02) இந்த முன்மொழிவுகளை பரிசீலிக்க உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |