பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு... ஜீவன் எடுத்த அதிரடி முடிவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று உரிய வகையில் தமது வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பு அமைச்சில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்,
இதன்போது சம்பள விவகாரம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"சம்பள நிர்ணயசபை இன்று கூடியது, 10 தொழிற்சங்கங்களில் 9 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். தோட்ட சேவையாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. பெருந்தோட்டக் கம்பனிகளும் வரவில்லை.
அடிப்படை சம்பளம்
10 ஆம் திகதி சம்பள நிர்ணயசபை கூடும் என முதலாம் திகதியே அறிவித்திருந்தோம். எனினும், தம்மால் வரமுடியாது என கம்பனிகாரர்கள் நேற்றைய தினமே (09) அறிவித்திருந்தனர்.
சம்பள உயர்வு தொடர்பில் கடந்த ஒகஸ்ட் மாதம் முதலே பேச்சு நடத்தி வருகின்றோம். எனவே, உரிய கால அவகாசம் இல்லை என்பது உட்பட கம்பனிகள் கூறிவரும் காரணங்கள் ஏற்புடையானவையாக அல்ல.
கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை என சட்டமா அதிபரிடமே நாம் ஆலோசனை பெற்றுவிட்டோம். ஆனால் சட்ட சிக்கல் எனக்கூறி கூட்டு ஒப்பந்தத்துக்கு வருவதற்கு கம்பனிகள் மறுக்கின்றன.
அதேபோல நாம் அடிப்படை சம்பளத்தையே அதிகரிக்குமாறு வலியுறுத்துகின்றோம். ஆனால் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்காது கொடுப்பனவு என்ற அடிப்படையில் 33 சதவீத சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கம்பனிகள் யோசனை முன்வைத்துள்ளன.
வாக்கெடுப்பு நடத்தப்படும்
33 சதவீத சம்பள உயர்வு நல்லதுதானே, அதனை ஏற்கலாம் அல்லவா என சிலர் கேட்கின்றனர். இது ஏற்புடையது அல்ல. அதனால்தான் நாம் நிராகரித்தோம். இந்த விடயத்தில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை.
சம்பள நிர்ணய சபையை இரண்டு தடவைகள் கூட்ட வேண்டும். உரிய காரணங்கள் கூறாமல் கம்பனிகள் இன்று வராததால் இன்றைய கூட்டத்தையும் கருத்திற்கொள்ள வேண்டும் என தொழில் அமைச்சரிடம் கோரினேன். அந்த கோரிக்கையை அவர் ஏற்றுள்ளார். 2 ஆவது கூட்டம் 24 ஆம் திகதி கூடும்.
இதன்போது சம்பள உயர்வு தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும். தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுக்காமல் இருந்தால் தீர்வைப் பெறலாம். 24 ஆம் திகதி தோட்ட சேவையாளர் சங்கமும் பங்கேற்கும் என எதிர்பார்க்கின்றோம். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அஞ்சாமல், தொழிலாளர்கள் பக்கம் நிற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்." என்றார்.
மேலும், 1,700 ரூபா என்ற எமது சம்பள உயர்வு கோரிக்கை அரசியல் நோக்கம் கொண்டது அல்ல. தற்போதைய பொருளாதார சூழ்நிலையினை ஓரளவேனும் சமாளிக்க வேண்டுமெனில் அந்த கொடுப்பனவு அவசியம். அதேபோல நாள் சம்பள முறைமை நிலையான தீர்வு அல்ல. எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு பொறிமுறை அவசியம். எனவும் அமைச்சர் ஜீவன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |