வாக்குக்காக மலையக மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல்வாதிகள் !
தேர்தல் காலமென்றால்தான் இலங்கையில் காணப்படும் சில அரசியல்வாதிகளுக்கு மலையக மக்கள் என்ற ஒரு சமூகம் இருப்பதே நினைவுக்கு வருகின்றது போல.
வெறுமனே அரசியல் ரீதியான மாற்றம் மற்றும் பொருளாதார ரிதியான அபிவிருத்தி என பெருபான்மை மக்களுடைய மாற்றத்தை மட்டும் தூக்கி பிடித்துகொண்டு அதை இலங்கையின் மாற்றம் என மார்த்தட்டிக்கொள்கின்றார்கள்.
எது மாற்றம் ?, வியர்வை சிந்தி உழைத்ததிற்கு கூலியை ஆயிரம் முறை கேட்டு பிச்சை எடுப்பது போல வாங்குவதா, இல்லை இலவசம் என்ற போர்வையில் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருவதா, உழைப்பிற்கான ஊதியம் இல்லாமல் வெளிநாட்டில் வீட்டு வேலை மற்றும் ஹோட்டல் வேலை என அடுத்தவன் கால்களை பிடிக்கும் சூழலுக்கு தள்ளப்படுவதா அல்லது கல்வி தொடர முடியாமல் வறுமையின் பிடியால் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேலைக்கு அமர்த்தப்படுவதா ?
நவீனமயப்படுத்தப்பட்ட இந்த காலத்தில் இது போல எல்லாம் சிக்கல் இருக்குமா என வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு ஒரு மாதம் எஸ்டேட்டில் வேலை செய்து குடும்பத்தை ஓட்ட சொன்னால் கிடைக்கும் ஒரு ரூபாய் பணத்தினை சம்பாதிக்க அங்கு சிந்தப்படும் தாய் தந்தையின் வியர்வையின் வெகுமதியும் நக்கல் பேச்சுக்களுக்கான பதிலும்.
இதையெல்லாம் பொருட்படுத்தாது எவ்வாறு இலங்கை மாற்றம் கண்டு விட்டது, இத்தனை வருடத்தில் மலையகத்தை பல்வேறு வகையில் மாற்றி விட்டோம், நாங்கள் சாதித்து விட்டோம் எனவே எங்களுக்கு வாக்களியுங்கள் என கூச்சமின்றி கேட்கின்றார்கள்.
எது இருக்கின்றதோ இல்லையோ மலையக பிரதேசத்தில் ஊருக்கு ஊர் நான்கு மற்றும் குறைந்தது ஐந்து மதுபானசாலைகள் இருக்கின்றது அதுவும் இல்லையென்றால் விசேட நாட்களில் மற்றும் விடுமுறைகளில் வீடுகளில் திருட்டு தனமாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதனை வாங்கி நன்றாக குடித்து விட்டு கொஞ்ச நேர சந்தோசத்திற்கும் மற்றும் சிலரின் பண இலாப சுயநலத்திற்கும் அங்கு பல குடும்பங்கள் பலியாகின்றது.
அத்தோடு, தோட்டத்தில் வேலை செய்யும் தாய்மாருக்கு ஒரு கழிப்பறை கிடையாது, சாதாரண நாட்களில் சரி மாதவிடாய் காலத்தில் எவ்வாறு அவர்கள் நாளை கடத்துவார்கள், பாடசாலை செல்ல வேண்டிய வயதில் பிள்ளைகள் வேலைக்கு செல்வதற்கு காரணம் என்ன, தாய்மார்கள் வெளிநாட்டில் வேலைக்கு போவதால் எத்தனை பிள்ளைகள் அயலவர்கள் உள்ளிட்ட ஏன் தன் வீட்டில் உள்ளவர்களாளேயே பாலியல் வன்கொடுமைகளுக்கு முகக்கொடுக்கின்றார்கள், கடன் மற்றும் வறுமை என தவறான முடிவெடுத்து தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றார்கள் ?
இது எல்லாம் குறித்து வாக்கு கேட்டு வரும் எந்த அரசியல்வாதிகளும் கதைப்பதில்லை மற்றும் தீர்வு கொடுப்பதும் இல்லை, அது சரி இவ்வாறு பிரச்சினைகள் இருக்கின்றது என்று தெரிந்தால் தானே அதற்கு தீர்வு கொடுப்பதை பற்றி சிந்திக்க ஏழும் வாக்கு மட்டும் கேட்டு வந்து செல்வோருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.
நாங்கள் மலையகத்தில் அபிவிருத்தியை கொண்டு வந்து விட்டோம் மற்றும் கல்வி கற்ற சமூகத்தை உருவாக்கி விட்டோம் என 20 வீத பெருமையை பேசி வாக்கு கேட்பவர்களுக்கு 80 வீதம் அங்கு மலையகம் சீரழிவதை கவனிக்க நேரமில்லை.
சில மலையக அரசியல்வாதிகளின் சினிமா பாணி பேச்சுக்களை கண்டு வெளியில் இருப்பவர்கள் இவர்கள் மலையகத்தை மாற்றி விட்டார், அங்கு என்ன சிக்கல் இருக்க போகின்றது என மெய்சிலிக்கின்றனர் ஆனால் மலையகத்தில் கல்வி கற்று ஒருவன் சாதித்து வெளியில் வருவதற்கு பின்னால் அவனின் கடின உழைப்பும், கடனும் மற்றும் பெற்றோரின் வியர்வையும் மாத்திரமே உள்ளதே தவிர எந்த அரசியல்வாதியின் உதவியும் கிடையாது.
வாக்கு கேட்டு வருவதற்கும் எதாவது தமது சுய இலாபத்திற்காகவும் மற்றும் ஏன் ஆள் பலத்தை கட்சிக்கூட்டங்களில் காட்டுவதற்காகவும் பேருந்து பேருந்தாக கூட்டத்தை ஏற்றி கூட்டிகொண்டு போவதற்கும், பிரசாரத்திற்கும் மற்றும் வாக்குகளுக்கும் மாத்திரம் மலையக பக்கம் எட்டி பார்க்கும் சிலர் அங்குள்ளவர்களின் பிரச்சினைகளை ஒரு போதும் காது கொடுத்து கேட்டு தீர்த்து வைத்ததில்லை.
நான் செய்கின்றேன் நான் செய்கின்றேன் என்பார்கள், காலப்போக்கில் மக்களே வெறுத்து நாங்களே பார்த்து கொள்கின்றோம் என்ற மனநிலைக்கு மாறும் அளவிற்கு அனைத்தையும் மாற்றி விட்டு காணமல் போய்விடுவார்கள் அத்தோடு அடுத்த தேர்தல் தொடங்கும் சிலரின் அபார நடிப்புக்களும் தொடரும்.
வளர்ந்து வந்த மலையகத்தவர்களின் சாதனை பார்க்கும் எவறும் அதற்காக அவர்கள் கடந்து வந்த பாதையின் பின்புலத்தை பார்ப்பதில்லை.
அந்த பாதை முழுக்க முழுக்க தனி மலையக மனிதனால் செதுக்கப்பட்டதே தவிர வாக்குறுதி தந்த எந்த அரசியல்வாதியின் உதவிகரங்களும் மற்றும் தடயமும் அல்ல.
நாடாளுமன்றம் அனுப்புங்கள் செய்கின்றோம் என்று கூறி பல வருடமாக ஒரே வசனத்தை அள்ளி தெளிக்கின்றார்கள், இருப்பினும் நம்பி அனுப்பியும் இவ்வளவு காலமும் எவ்வித மாற்றமும் இல்லை.
இந்த வரிசையில் இம்முறை தேர்தலை அடுத்தும் மலையக மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாராம் மற்றும் கடனற்ற மூன்று வேளை உணவு என்பன கேள்விக்குறியாகுமா என்றே சித்திக்க தோன்றுகின்றது.
மலையக மக்கள் வெகுளி, இலகுவாக ஏமாற கூடிய மக்கள் என முத்திரை குத்தியே குத்தியே இங்கு மலையக மக்களின் இரத்தம் சில விசக்கிருமிகளால் உறிஞ்சப்படுகின்றது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |