இலங்கை தொடர்பில் அமெரிக்கா கரிசனை
பாதுகாப்பான மற்றும் செழிப்பு மிக்க நாடாக இலங்கையை மாற்றுவதில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு கடற்படை தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங் பதவியேற்ற பின்னர், அவர்களுக்கிடையிலான முதலாவது உத்தியோகபூர்வ கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்கத் தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதிக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நல்லெண்ண அடிப்படையில் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த மூத்த பாதுகாப்பு உதவியாளர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் காக்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை இணை லெப்டினன்ட் கமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டர் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.







