அமெரிக்கா, கனடாவை வாட்டும் 'வெடிகுண்டு' சூறாவளி - குறைந்த பட்சம் 38 பேர் பலி
அமெரிக்கா மற்றும் கனடாவை தொடர்ந்தும் தாக்கும் கடுமையாக ஆர்க்டிக் உறைபனி நிலைமைகள் காரணமாக குறைந்த பட்சம் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா முழுவதும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பஃபலோ நகரமே பனிப்புயல் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் நிலைமைகள்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள மெரிட் நகருக்கு அருகே பனிக்கட்டி நிறைந்த வீதியில் பேருந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் புயல் நிலைமைகள் குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசியமானவை தவிர ஏனைய பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் நிலைமைகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், மின் விநியோக தடைகளை அடுத்து சீராக மின் விநியோகம் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.7 மில்லியன் மக்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த எண்ணிக்கை 2 இலட்சத்தை விட குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான விமான சேவைகள் மீளெடுக்கப்பட்டுள்ளதால், பலர் நத்தார் விடுமுறையில் தமது குடும்பங்களிடம் சென்றடைவதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
குளிர்காற்று எச்சரிக்கை
நேற்று ஞாயிற்றுக்கிழமை 55 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு குளிர்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வளிமண்டல அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடி குண்டு சுறாவளி என அடையாளப்படுத்தப்பட்ட பனிப்புயல் காரணமாக கடுமையான பனி மற்றும் காற்று நிலைமைகள் உருவாகியிருந்தது.
இதன்காரணமாக அமெரிக்கா முழுவதும் பயணத் திட்டங்கள் சீர் குலைந்துள்ளன.
இது பஃபலோ நகரில் மிகவும் அழிவுகரமான புயலாக வரலாற்றில் பதிவாகும் என பஃபலோவை பூர்வீகமாகக் கொண்ட நியூயோர்க் மாநில ஆளுநர் கேத்தி ஹோச்சுல் குறிப்பிட்டுள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)