நியூயோர்க்கிலும் சீக்கியரை விரட்டும் இந்தியா: ஆதாரங்களை வெளியிட்ட அமெரிக்கா!
நியூயோர்க்கில் வைத்து சீக்கிய அமைப்பின் தலைவரை கொலை செய்ய முயன்றதாக இந்தியா மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘நீதிக்கான சீக்கியர்கள்' என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருவதனால் அவரைக் கொலை செய்ய இந்தியா முயற்சித்ததாகவும் அதனை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்ததாகவும் அண்மையில் அமெரிக்கா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிலும் குடியுரிமை
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமையைப் பெற்றுள்ள பன்னுன் தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசித்து வந்த வேளை அவர் மீது கொலை முயற்சியை இந்தியா தீட்டியதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் இந்திய அரசு அதிகாரிகளுடன் இணைந்து பன்னுனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது
அதுமாத்திரமன்றி குப்தா தற்போது செக் குடியரசு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விசாரணைக்காக அமெரிக்காக்காவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது தொடர்பில் இந்தியா கவலை வெளியிட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான உண்மை அதன் பின்னணி என்பவற்றை வெளிக்கொணர்வதற்காக உயர்மட்ட அளவில் விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அதன் வெளிப்படைத் தன்மையான முடிவுகளால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமெரிக்க தரப்பிலிருந்து இதுதொடர்பாக சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பதால் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட துறைகள் மிக கவனமாக கையாண்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான நிஜ்ஜார் இன் கொலை விவகாரத்திலும் இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமெரிக்காவும் அதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளமை இந்தியாவின் வெளியுறவு விவகாரத்தில் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.