அமெரிக்காவின் மிகுந்த கட்டுப்பாட்டு வான்பரப்பில் நுழைந்த தனியார் விமானம்
அமெரிக்காவில் இடம்பெற்ற திடீர் விமான விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டிசி பிராந்தியத்தின் வான்பரப்பில் பறந்த தனியார் விமானமொன்றை அமெரிக்கப் போர் விமானங்கள் துரத்திச் சென்ற நிலையில், அத்தனியார் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விமானத்தில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. செஸ்னா (Cessna 560 Citation V) ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான கட்டுப்பாட்டு அழைப்பு
விபத்துக்குள்ளான குறித்த தனியார் விமானம் வொஷிங்டன் டிசி பிராந்தியத்தின் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட பகுதிக்குள் பிரவேசித்துள்ளது.
அவ்விமானத்தின் விமானி, பிராந்திய விமான கட்டுப்பட்டு அழைப்புக்கு பதிலளிக்காத நிலையில், இவ்விமானத்தை விலகிச் செல்ல வைப்பதற்காக இரு போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் படையினரின் அழைப்புகளுக்கு தனியார் விமானத்தின் விமானி ஏன் பதிலளிக்கவில்லை என்பதும் தெரியவில்லை.
போர் விமானங்கள்
இவ்விமானம் சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும், அது வீழ்ந்தமைக்கு போர் விமானங்கள் காரணமாகவில்லை எனவும் பிராந்திய இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்படி விமானம் புளோரிடா மாநிலத்திலுள்ள 'என்கோர் மோட்டோர்ஸ் ஒவ் மெல்பேர்ன்' எனும் நிறுவனமொன்றினால் பதிவு செய்யப்பட்டதாகும்.
இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜோன் ரம்பெல் (75)இது தொடர்பாக கூறுகையில், தனது மகள், 2 வயதான பேத்தி, பணிப்பெண் ஆகியோர் அவ்விமானத்தில் பயணம் செய்தனர் எனக் கூறியுள்ளார்.
