அமெரிக்க கடற்படைக்கு பேரிழப்பு! மாயமாகிய அதிநவீன ஆளில்லா உளவு விமானம்
பாரசீக வளைகுடா பகுதியில் கடந்த வாரம் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான மிகவும் விலையுயர்ந்த அதிநவீன எம்.க்யூ-4சி டிரைட்டன் (MQ-4C Triton) ஆளில்லா உளவு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுமார் 240 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த விமானம் ஏப்ரல் 9-ஆம் திகதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை பாதுகாப்பு கட்டளை உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தாலியிலுள்ள கடற்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது 50,000 அடி உயரத்திலிருந்து திடீரென 9,000 அடிக்குக் கீழே சரிந்து ரேடார் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.
விபத்திற்கான காரணம்
விமானம் விழுவதற்கு முன்னதாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததைக் குறிக்கும் அவசரக் குறியீடுகளை வெளிப்படுத்தியிருந்தாலும், இந்த விபத்திற்கான சரியான காரணம் குறித்து அமெரிக்க கடற்படை இதுவரை விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

Image Credit: Northrop Grumman
ஒரு எஃப்-35 போர் விமானத்தை விட இரண்டு மடங்கு அதிக விலையைக் கொண்ட இந்த ட்ரோன், தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்து உளவு பார்க்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
அமெரிக்க கடற்படையிடம் இது போன்ற 20 விமானங்கள் மட்டுமே உள்ள நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த இழப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |