நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள் - புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் உள்ளிட்ட 6 பேர் பலி!
இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில், புகழ்பெற்ற அமெரிக்க ஆல்ட்- பொப் பாடகரும் இணைய ஆளுமையுமான ஆலிவர் ட்ரீ உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (14) காலை பிரேசில் - ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்ததால், பெரும் பேராபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது என தீயணைப்புப் படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் பேபியோ கான்ட்ரிராஸ் தெரிவித்துள்ளார்.
வெடித்துச் சிதறிய கார்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு உலங்கு வானூர்திகளும், அங்கிருந்த மின்சார கார் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளன.

விபத்துக்குள்ளான ஒரு உலங்கு வானூர்தியில் ஒரு பிரேசிலிய இசைத் தயாரிப்பாளர், அர்ஜென்டினாவின் வீடியோ இயக்குனர், மற்றும் 'காஸ்பி' என்று அழைக்கப்படும் பிரபல அர்ஜென்டினா யூடியூபர் காஸ்பர் பிரிம் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர்.
மற்றொரு உலங்கு வானூர்தியில் பைலட் மட்டும் இருந்துள்ளார். இரண்டு உலங்கு வானூர்திகளிலும் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உலங்கு வானூர்திகள் விழுந்து நொறுங்கியதில் அங்கிருந்த சுமார் 20 மின்சார கார்கள் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்துள்ளன.
புதிய விளம்பர உத்தி
"பயணிகள் பட்டியலில் 32 வயதான ஆலிவர் ட்ரீயின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனினும், விபத்தில் உடல்கள் மிக மோசமாகக் கருகியுள்ளதால், மரபணு பரிசோதனைக்கு பின்னரே உடல்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்." என பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் தனது மியூசிக் வீடியோக்களில் ஆபத்தான ஸ்டண்ட்களையும், பல போலி மரண நாடகங்களையும் முன்பு செய்துள்ளதால், இந்த ஹெலிகாப்டர் விபத்துச் செய்தியும் அவரது புதிய விளம்பர உத்திகளில் ஒன்றாக இருக்குமோ என அவரது 11 மில்லியன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
ஆனால், அவர் தனது உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 6 அன்று சாவ் பாலோவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரேசிலில் தங்கியிருந்த நிலையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |