ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரத்திற்கான பொது - வாக்கெடுப்பு நடத்த கூட்டாக அழைப்பு
ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரத்திற்கான பொது - வாக்கெடுப்பு நடத்த அமெரிக்க தமிழ் அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண தமிழர்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு (Independence Referendum) நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகள் கூட்டாக அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளன.
இலங்கைத் தீவை முறையற்ற முறையில் காலனித்துவ நீக்கம் (improper decolonization) செய்த பிரித்தானியாவிடமிருந்து, தீவு சுதந்திரமடைந்து அடுத்த மாதம் 75 ஆண் டுகள் நிறைவடைவதை சுட்டிக் காட்டிய கடிதத்தில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளனர்.
உலகத் தமிழ் அமைப்புக் கூட்டமைப்பு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு, மற்றும் உலகத் தமிழர் அமைப்பு ஆகியவை இணைந்து எழுதிய இந்தக் கடிதம், 118ஆவது அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


