கியூபாவை இலக்கு வைத்த அமெரிக்கா! சீனா உள்ளே வந்ததால் பதற்றம்
அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, கியூபாவுக்கு முழுமையான ஆதரவும் உதவியும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
வெனிசுவேலாவில் நிக்கோலஸ் மதுரோவை ஆட்சியிலிருந்து நீக்கி கைது செய்த ட்ரம்ப் நிர்வாகம், அடுத்து கியூபாவுக்க பொருளாதார தடைகள் மற்றும் முற்றுகையால் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், “கியூபாவின் வீழ்ச்சி உறுதி” என ட்ரம்ப் எச்சரித்ததும், பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் எதிர்ப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், கியூபாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் குறித்து சீனா கவலை வெளியிட்டுள்ளதுடன், கடுமையான எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சக செய்தியாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர் சந்திப்பில், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் செயல்களை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, கியூபாவிற்கு எதிரான முற்றுகையையும் தடைகளையும் உடனடியாக நீக்குமாறும் தெரிவித்துள்ளார்.
கியூபாவின் ஆட்சி
ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவுக்கு எண்ணெய் இறக்குமதி தடுப்பை பரிசீலித்து வருகிறது. சில அமெரிக்க அதிகாரிகள், எண்ணெய் இறக்குமதி முடக்குவதன் மூலம் கியூபாவின் ஆட்சியை வீழ்த்த முடியும் எனவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் சனிக்கிழமையன்று இராணுவ பயிற்சிகளை மேற்பார்வை செய்துள்ளார். இது அமெரிக்காவில் இருந்து வரும் ஆக்கிரமிப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்நிலையில், கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை கண்டித்து சீனா குரல் கொடுத்துள்ளமையானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |