இனவாத கருத்துக்களால் அடங்கி ஒடுங்கப் போவதில்லை - தமிழ் எம்.பிக்கள் சீற்றம்
உதயகம்மன்பில போன்றவர்களது இனவாத கருத்துக்களால் எம்மை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கவே முடியாது. நாம் அவர்களின் இனவாத செயற்பாடுகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் உதய கம்மன்பில நேற்று(21) தெரிவித்திருந்தார்.
அத்துடன் தெற்கிலுள்ள சிங்கள மக்கள்தான் மூன்று தலைமுறைகளாக தமிழ் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வரலாறு தெரியாத முட்டாள்

இந்த நிலையில், இது தொடர்பில் கஜேந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில்,
“கம்மன்பில வரலாறு தெரியாத முட்டாள். தமிழ் மக்கள் தான் தெற்கில் தொடர்ச்சியாக இன்று வரை வேட்டையாடப்படுகின்றார்கள்.
தெற்கில் உள்ள தமிழ் மக்களை இலக்குவைத்து தான் கலவரங்கள் கூட கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. போர் காலத்திலும் போருக்கு பின்னரும் தெற்கிலுள்ள தமிழ் மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
நாங்கள் தெற்கில் பாதுகாப்பாக இருந்திருந்தால் எவ்வாறு எனது தந்தை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்?
எங்களுக்கு எவ்விதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. எங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தே தீரும்.
போர் காலத்தைவிட தற்காலமே மோசமானது. போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தார்கள். இதன் காரணமாக தமிழர் மீது கை வைத்தால் அடி விழும் என்று தெரியும்.
இப்பொழுது எந்தவொரு கவசமும் இன்றி வாழ்ந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியாகப் பயணிக்கின்றோம்.
சிங்கள - பௌத்த மக்களுக்கு எதிராக வடக்கு - கிழக்கு மக்கள் செயற்படவில்லை. போர் முடிவடைந்த பின்னர் வடக்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஏனைய இடங்களில் சிங்கள மாணவர்கள் படிக்கின்றார்கள்.
வேலை வாய்ப்புக்காக அதுவும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பைக்கூட தட்டிப்பறித்து சிங்களவர்கள் வடக்கு - கிழக்கிற்கு வருகின்றார்கள்.
அவர்கள் சிங்களவர்கள் என்பதால் அங்குள்ள தமிழ் மக்கள் அவர்களை ஒன்றும் செய்யவில்லையே?
போர்க்காலத்திலும் தமிழீழ விடுதலைப்புலிகள் விகாரைகளை பாதுகாத்தனர். தொல்பொருள் என்று சொல்லி தமிழ் - பௌத்த இடங்களை சிங்கள அடையாளமாக மாற்றுகின்றனர்.
எங்களை பயங்கரவாதிகளாக முத்திரைகுத்தி அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கக்கூடும். அது கனவிலும் நடந்தேறாது என்பதை அவருக்கு சொல்லுகின்றேன்.
உங்களின் இனவழிப்பை தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம்” என்றார்.
| முற்றுகையிடுவோம் வாருங்கள் - சிங்களவர்களுக்கு அழைப்பு |
வாக்கு வங்கியை பெருக்கும் முயற்சி

இதேவேளை, கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் நேற்றைய(21) ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது,
“எங்களுடைய மதத்தலத்தில் பௌத்த மதச்சின்னங்களை திணிக்க வேண்டாம் என்றே நாம் கூறுகிறோம். அதுமாத்திரமல்ல அரசாங்கமும் இதனை இணைந்து செய்கிறது.
அவர்கள் இனவாதத்தை கையிலெடுக்காமல் விட்டிருந்தால் நாடு இவ்வளவு படுபாதாளத்துக்கு போயிருக்காது. அதுபோலவே தற்பொழுது மதப்பிரச்சினையையும் தொடங்கியிருக்கின்றார்கள்.
இதனால் நாடு பிரச்சனைக்குள் மீள செல்லப்போகிறது. இவர்கள் கொழும்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளின் முன்னால் போராட்டம் செய்தால் செய்யட்டும்.
அது அவர்கள் தம்மை பௌத்த - சிங்கள தலைவர்கள் என சித்தரித்து வாக்கு வங்கியை பெருக்கப்போகின்ற நாடகமே” என்றார்.