யானை தாக்குதலுக்குள்ளாகி ஏழு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
வாழைச்சேனை காவல்துறை பிரிவின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனை பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஏழு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வடமுனை நாகதம்பிரான் வீதி சேர்ந்த பெருமாள் ராமூ விமலன் (வயது 69) ஏழு பிள்ளைகளின் தந்தை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வெள்ளிக் கிழமை(06) மாலை 6.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நோய்வாய்பட்டிருந்த தனது தாயாருக்கு தேவையான குளிசையினை அருகிலுள்ள வெலிக்கந்தை கிராமத்திற்கு சென்று கொள்வனவு செய்து திரும்பும் வழியில் காட்டுப்பகுதியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யானையில் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவரை வெலிக்கந்தை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியின் கட்டளையின் பிரகாரம் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த வடமுனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் பலர் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் யானையில் இருந்து தங்களை பாதுகாத்து தருமாறு பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.