சிறைக்குள் கொலை முயற்சி - வசந்த முதலிகே கூறும் அதிர்ச்சி பின்னணி
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு, தம்மை கொலை செய்யும் நோக்கமே இருந்தாகவும் விஜய வீர மற்றும் விஜேய குமாரதுங்க ஆகியோருக்கு ஏற்பட்ட நிலைமையே தமக்கும் ஏற்படும் என காவல்துறை அதிகாரியொருவர் தம்மை எச்சரித்ததாகவும் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட வசந்த முதலிகே, தம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், நீதிக்கு புறம்பாக தடுத்துவைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் வாகனத்தில் கடத்திச் சென்று மறைவான இடத்தில் வைத்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் போராட்டத்தின் ஒரு கட்டம்
மேலும் கருத்து வெளியிட்ட வசந்த முதலிகே, “மக்களின் போராட்டத்திற்குள் பல வெற்றிகளை சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். இந்த மக்கள் போராட்டத்திற்குள் கிடைத்த பிரதான வெற்றியே மக்களின் பலத்திற்கு முன்னால் அனைத்தும் கீழே என்பது என்ற விடயம் அதிகம் அதிகமாக இந்த சமூகத்தில் உறுதி செய்யப்பட்டது.
இந்த மக்கள் போராட்டத்தின் ஒரு கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்மை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தார்.
ஒகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிடியாணை இருப்பதாக தெரிவித்து கைதுசெய்தனர். கல்வெல சிறிதம்ம தேரர், அதேபோன்று நான், ஜீவந்த சகோதரர் உள்ளிட்ட சிலரை கைதுசெய்து, பொய்யான வழக்கு தாக்கல் செய்து, சாட்சியை தேடுவதாகக் கூறி, பொய்யான சாட்சியை உருவாக்கி, நீண்டகாலம் எம்மை சிறைவைப்பதற்கான பிரயனத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எம்மை சிறைவைப்பது என்பது தனியொருவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறை அல்ல. இந்த முழுமையான சமூகத்திலும் போராடும் உங்களுக்கும் இதுவே நடைபெறும். மீண்டும் வீதியில் இறங்கினால் இதுவே நடைபெறும் என்பதை காண்பிக்கும் வகையிலேயே அரசாங்கமும் ரணில் விக்ரமசிங்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
வருடக் கணக்கில் சிறைவைக்க முயற்சி
இந்த திரைக்கதையை எழுதும் போது, இவ்வாறு எம்மை விடுதலை செய்யும் நோக்கம் இருக்கவில்லை. முடிந்தால் எம்மை கொலை செய்து, அல்லது வருடக் கணக்கில் எம்மை சிறைவைக்கவே அரசாங்கம் முயற்சி செய்தது.
எனினும் இந்த நாட்டு மக்களின் தொடர்ச்சியான தலையீடுகளுக்கு மத்தியில் அடக்குமுறைக்கு முன்னால் மண்டியிடுவதற்கு பதிலாக அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் சட்டத்தரணிகள், தொழிற்சங்கத்தினர், பல்கலைகழக விரிவுரையாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் அதனையும் தாண்டி, அனைத்து குடிசார் செயற்பாட்டாளர்களும் சகோதரர்களும் சகோதரிகளும் இணைந்திருந்தனர்.
அதேபோன்று ஒவ்வொருவரினதும் தாய் மற்றும் தந்தையர் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தனர். மேன்முறையீட்டு மனுவில் கையெழுத்திட்ட தந்தை மற்றும் தாய்மாரை நாம் பார்த்தோம். சத்தியக் கடதாசியில் கையெழுத்திட்ட தாய் மற்றும் தந்தையரை நாம் பார்த்தோம். நாம் நீதிமன்ற்ம் சென்ற போது, எம்மை பார்க்க வந்த தந்தை மற்றும் தாய்மார்.
167 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த போது உணவுப் பொதியொன்றுடன் வருகைதந்து எமது சுக துக்கத்தை விசாரித்த தாய் மற்றும் தந்தையர். இந்த அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டும் என எண்ணிய தந்தை மற்றும் தாய்மார், கண்ணீர்புகை மற்றும் தடியடிப் பிரயோகம் நடத்திய போதிலும் வெயிலிலும் முன்நின்ற தாய், தந்தையர் மற்றும் அனைத்து பல்கலைகழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தினால் எம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற விடயம் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டு, எம்மை தற்போது விடுதலை செய்துள்ளார்கள்” - என்றார்.

