தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட நால்வரும் பிணையில் விடுதலை..!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவதற்காகவும், வேறு ஏதாவது காவல்துறை நிலையங்களில் இவர்கள் தேடப்படும் பட்டியில் உள்ளார்களா என்பது பற்றிய அறிக்கையினை பெற்றுக்கொள்வதற்காகவும் குறித்த 4 சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினரால் நீதவான் முன்னிலையில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து, இலங்கை அரசியல் அமைப்பின் படி ஒன்று கூடுகின்ற உரிமை அடிப்படை உரிமையாக காணப்படுகின்ற நிலையில் குறித்த 4 நபர்களுக்கும் பிணை வழங்குமாறு தமிழ் தேசிய மக்களை முன்னணி சார்பில் முன்னிலையான சடடத்தரணிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
இந்நிலையில், குறித்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதிபதி கைது செய்யப்பட்ட நால்வரையும் தலா 2 லட்சம் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கு 9ம் மாதம் 13ம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு வருகை தருமாறு கட்சியின் மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகர், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று கிளிநொச்சி காவல்நிலையத்திற்கு சென்ற மூவரும் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



