நீரினால் மூழ்கிய வட்டுவாகல் பாலம்: மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு!
புதிய இணைப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) - வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிபாலம் வெளியே தெரியாதபடி இருந்த காரணத்தினால் வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் நீர் வடிந்திருந்தது.
மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக மீண்டும் வட்டுவாகல் பாலம் நீரினால் குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் உள்ளது.
இதனால் குறித்த பாலம் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கன மழை காரணமாக முல்லைத்தீவு (Mullaitivu) - நந்திக்கடல் பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
இதனால் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர்.
இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வட்டுவாகல் பாலத்திற்கு நேரடியாகச் சென்று, வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள குறித்த சிக்கல் நிலைதொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
குறிப்பாக இவ்வாறு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.மோகனகுமாருடனும் இந்த போக்குவரத்துச் சிக்கல் நிலைகுறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாலை 03.00மணியளவில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் திணைக்கள அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர் நந்திக்கடல் முகத்துவாரம் வெட்டப்பட்டு நந்திக்கடல் ஆற்றுநீரை கடலில் விடுவதுடன் போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படுமென மேலதிக மாவட்டசெயலாளர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










