தமிழர் தாயகப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இளைஞன்!
வவுனியாவில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பூவரசங்குளம் காவல்துறையினருக்கு நேற்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெட்டுக் காயங்களுடன் சடலம்

சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் சடலத்தில் வெட்டுக் காயங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
காவல்துறை விசாரணை

இதேவேளை குறித்த சடலத்தை பதில் நீதிபதி த. திருவருள் பார்வையிட்டிருந்ததுடன் சட்ட வைத்திய அதிகாரியும் சடலத்தை பார்வையிட்டார்.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
