வவுனியாவை உலுக்கிய கொலை - கைது செய்யப்பட்ட 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இரண்டாம் இணைப்பு
வவுனியா தோணிக்கல் பகுதியில் இருவரை வெட்டிப் படுகொலை செய்து 8 பேரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்று நேற்று (31) அப்பகுதியிலுள்ள ஏரியொன்றில் இந்தக் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள், ஒரு கோடாரி மற்றும் மூன்று இரும்பு குழாய்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து தீ வைத்து வாளால் வெட்டி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக ஐவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தோணிக்கல்லில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்ற வேளை குறித்த வீட்டிற்குள் புகுந்து தீ வைத்ததுடன் வீட்டின் உரிமையாளரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தம்பதியர் மரணமடைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐவர் கைது
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசேட காவல்துறை குழுக்கள் விசாரணைகளை பல கோணத்தில் முன்னெடுத்திருந்ததுடன் தடயங்கள் மற்றும் சி.சி.ரி.வி கமராக்களை பரிசீலித்தும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில்; தற்போது 5 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து விசாரணை செய்து வருவதாக தெரியவருகின்றது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.