வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தையும் மக்களையும் ஏமாற்றிய அமைச்சர்கள்!
வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் மீண்டும் பிரதிஷடை செய்யப்படும் என்று உறுதி அழித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்றும் ஆற அமர பேசி நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி பல்ட்டி அடித்துச் சென்றுள்ள சம்பவம் ஆலய நிர்வாகத்தையும் மக்களையும் ஏமாற்றிய சம்பவம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தது.
முறைப்பாடு
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி காவல்துறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான் , மற்றும் அதிபரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்தவாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
அதன்பிரகாரம் முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட்ட சேதப்படுத்தப்பட்ட சிலைகளை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்கனவே சிலைகள் இருந்த பகுதியில் மீண்டும் வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் நேற்றையதினம் ஆலய நிர்வாகத்தினை மீறி ஆலய வளாகத்தி்ல் சிலதரப்புக்கள் தான்தோன்றித்தனமாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டமையால் மூன்று பேர் காவல்துறைனரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமால் போயிருந்தது.
இதேவேளை எமது பிரசன்னத்துடன் இன்றையதினம் விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்பிற்கும் உறுதிபடத் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன்,ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்திற்கு வருகைதந்தனர்.
நீதிமன்றில் வழக்கு
எனினும் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்கமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் ஆற அமர கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நீங்கள் சிலைகளை வைப்போம் என்று அறிக்கை விடும் போது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கான உரிய பதில்கள் அவர்களால் வழங்கப்படவில்லை.
அத்துடன் வருகைதந்த அமைச்சர்கள் குழு ஆலயத்தின் பிரதான மலைப்பகுதிக்கு செல்லாமல் கீழே நின்று சுற்றுலாவிற்கு வந்ததுபோல அவதானித்து விட்டு திரும்பிச்சென்றனர்.
மக்களுக்கு அச்சுறுத்தல்
இதனால் இன்றையதினம் விக்கிரகங்களை வைக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மக்கள் ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர்.
நேற்றையதினம் ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளின் காரணத்தால் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருப்பதாக ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு ஆலய வளாகத்தை சூழவும் செல்லும் வீதிகளெங்கிலும் காவல்துறையினர் , இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்ததோடு அங்கு செல்லும் மக்களை புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தியதாகவும் அப்பகுதி மக்களை அங்கு செல்லவேண்டாம் என காவல்துறையினர் அச்சுறுத்தியதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
