வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் ஒம் நமசிவாய சொல்வது குற்றமா: சுகாஸ் கண்டனம்
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று ஒம் நமசிவாய சொல்வது குற்றமா என சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையினுடைய எந்தச் சட்டத்தையும் மீறாத 8 அப்பாவிகளான சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வெடுக்குநாறிமலை விவகாரம்
காவல்துறையினருடைய விசாரணைகள் முடியாத காரணத்தினால் இந்த வழக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு திகதியிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கவனத்திற்கு காவல்துறையினரின் அராஜகத்தையும், 8 சந்தேக நபர்களையும் தாக்கி காயப்படுத்திய சம்பவத்தையும் கொண்டு வந்துள்ளோம்.
அதனால் அந்த 8 பேரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று பணித்திருக்கிறது. அந்த சந்தேகநபர்கள் செய்த ஒரேயொரு தவறு ஒம் நமசிவாய என்று சொல்லியது மாத்திரம் தான்.
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று ஒம் நமசிவாய சொல்வது குற்றமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளோம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல்துறையினரின் நடவடிக்கையும், கைதும் தான் சட்டவிரோதமானதே தவிர, இவர்கள் எந்தக் குற்றம் செய்யவில்லை”எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |