காவல்நிலைய பொறுப்பதிகாரியின் கீழ்த்தரமான செயல் : வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் கடும் கண்டனம்
இரண்டாம் இணைப்பு
வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உட்பட கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவராத்திரி பூஜைக்கான ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று (07)நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் இன்று (08) வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கீழ்த்தரமான முறையில் செயற்பட்ட நெடுங்கேணி காவல்நிலைய பொறுப்பதிகாரி மீது வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகம் பாரிய கண்டனங்களை முன்வைத்துள்ளது.
வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஆலயத்தின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வெடுக்குநாறி ஆலயத்தில் பூஜைகளுக்காக சென்றபோது பூசகர் உள்ளிட்ட சிலரை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உத்தியோகத்தர்கள் மறித்து ''பூஜைகளுக்கு மின்சாரத்தினை பயன்படுத்த வேண்டாம்" என கட்டளையிட்டுள்ளனர்.
அத்துமீறிய காவல்துறை
அத்தோடு, பூசகர் உள்ளிட்ட குழுவின ஆலய பூஜை ஒழுங்குகளுக்கு சென்றபோது தண்ணீர் கொள்கலன் வாகனமானது பழுதடைந்த நிலையில் அதனை சரி செய்ய 15 நிமிடங்கள் சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உத்தியோகத்தர்கள் அருகில் வந்து ''ஆலயத்திற்கு செல்லவேண்டாம். காவல் நிலைய பொறுப்பதிகாரி வந்தவுடன் அவரின் அனுமதியோடு செல்லுங்கள்'' என உத்தரவிட்டுள்ளனர்.
அதன்போது, பின்னால் வருகைதந்த பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட 5 பேரை அவ்விடத்திற்கு வந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது அடையாள அட்டையை பிடுங்கி முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளார்.
பூஜைகள்
மேலும் ஆலய பூசகரை இழுத்து சென்று வண்டியில் ஏற்றியுள்ளதோடு ஆலயத்தில் இருப்பவர்களை துப்பாக்கியால் சுட்டு கைது செய்யுமாறு ஏனைய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கூட எமது வழிபாட்டுரிமை தொடர்பில் நீதிமன்றம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் நெடுங்கேணி காவல்நிலைய பொறுப்பதிகாரியின் இந்த கீழ்த்தரமான செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எமது வழிபாட்டுரிமையை பாதுகாக்க ஒழுங்கு செய்த படி பூஜைகள் நடைபெறவேண்டும்.
மேலும் கைதுசெய்யப்பட்ட ஆலய பூசகர் உட்பட எமது நிர்வாகத்தினர் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளைய தினம் இடம்பெறும் பூஜைகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |