புதிய திருப்பங்களுடன் தாஜூதீன் கொலை விசாரணை! நோட்டமிடப்படும் ஷிரந்தியும் - ராஜபக்சரும்
ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிஃபெண்டர் (Defender) ரக வாகனம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவால் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் பற்றிய தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய அறக்கட்டளைக்குச் சொந்தமான WP KA 0642 என்ற பதிவு எண்ணைக் கொண்ட டிஃபெண்டர் (Defender) ரக வாகனம் ஒன்று வசீம் தாஜுதீனை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கையளித்தது.
வெளிவரும் உண்மைகள்
இவ்வாறான பின்னணியில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த குழுவுடன் நெருக்கமாக பணியாற்றிய அருண விதானகமகே அல்லது கஜ்ஜா எனப்படுபவர் அவர்களிடமிருந்து பிரிந்து சென்று பல்வேறு குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியும் இருந்தார்.
சர்ச்சைகள் வலுத்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் கஜ்ஜா கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கஜ்ஜாவின் மனைவி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக புதிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விசாரணைகளில் திருப்பம்
சிசிரீவி காணொளிகளின் அடிப்படையில், தாஜுதீன் கொல்லப்பட்ட நாளில் அவரைப் பின்தொடர்ந்தவர்களில் ஒருவராக கஜ்ஜா இருந்ததாக அவருடைய மனைவி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
எனினும், அந்த கருத்தை கஜ்ஜாவின் மகன் மறுத்துள்ள நிலையில் விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், தற்போது காவலில் உள்ள சம்பத் மனம்பேரி, கஜ்ஜாவின் கொலைக்குத் தேவையான துப்பாக்கியை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
