எம்.பிக்களுக்கான வாகன கொள்வனவு - நீதிமன்ற படியேறியது ஜே.வி.பி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட 227 அதி சொகுசு வாகனங்களுக்கான அனுமதியை வழங்கக்கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் பின்னணியில் ஜே.வி.பியினரால் இந்த மனு இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான பாவனைக்காக 227 அதி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான அனுமதியையும் அமைச்சரவை வழங்கியிருந்தது.
எனினும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்புகள் வலுவடைந்ததை அடுத்து அந்த திட்டத்தை கைவிடுவதாக அரச தரப்பினரே அறிவித்திருந்தனர். இருந்த போதிலும் அரசாங்கம் குறித்த வாகனங்களை பல கோடி ரூபா செலவில் இறக்குமதி செய்ய முயற்சிப்பதாகவும் அதற்கு தடை உத்தரவை வழங்குமாறு கோரியும் உச்சநீதிமன்றத்தில் இன்று அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி இந்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல, அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இலங்கை வங்கி, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் உட்பட 31 பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதிலும் மக்கள் கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கடும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அவற்றைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அதி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வது அரசியலமைப்பிற்கு விரோதமான முடிவாகும் என்று மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 19 மணி நேரம் முன்