பிரபாகரனின் பெயரை வரலாற்றிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான சிங்கள மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் போன்ற ஒரு தலைவர் அந்த இடத்தில் வந்திருந்தால், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் சேர்ந்து அவரை வரவேற்றிருப்பார்கள் - கொண்டாடியிருப்பார்கள்.
அவர் தமிழீழத்திற்கான தலைவராக மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இலங்கைக்குமான ஒரு தலைவராக உயர்ந்திருக்க முடியும் என்கிறார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டொக்டர் கே. கிருஷ்ணசாமி.
கடும் ஆட்சேபனை
ராஜபக்சர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது தமிழ் மக்களும் சேர்ந்து போராடியிருந்தால், 50 வருட கால வரலாற்றை மாற்றியிருக்க முடியும்.
அந்த தருணத்தில் பிரபாகரனை கொண்டு வந்து நிறுத்தியிருந்தால், சிங்கள மக்கள் கூட பிரபாகரனது தலைமையில் அந்தப் போராட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பு இருந்ததாக அவர் கூறுகிறார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேற்கண்டவாறு கூறிய அவர், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கூறிய கூற்று தொடர்பில் கடும் ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.
அவர் ஒரு மகத்தான தலைவர். பிரபாகரனின் பெயரை வரலாற்றிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது. ஆனால், அப்படியான மகத்தான தலைவரின் பெயரை சொல்லுகின்ற பொழுது, அதிக கவனம் தேவை.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சில அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பு, பிரபாகரனின் பெயரை வணிகமாக்கப் பார்க்கிறார்கள். இதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவ்வாறான மலிவான அரசிலுக்கு பிரபாகரனது பெயரை பயன்படுத்தக்கூடாது. அவருடைய பெயரை வைத்து அரசியல் செய்வதோ? வணிகம் செய்வதோ? எந்த விதத்திலும் முறையானது அல்ல.
அது உலகெங்கும் வாழக்கூடிய ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு சமமானது எனக் கூறியுள்ளார்.
