வரதன் கிருஸ்ணாவின் “வெந்து தணியாத பூமி” நூல் அறிமுக நிகழ்வு
ஊடகவியலாளர் வரதன் கிருஸ்ணா எழுதிய “வெந்து தணியாத பூமி” என்ற நூலின் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை ஐந்து மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில், ஆய்வுரையை சமூகச் செயற்பாட்டாளரும் மனித உரிமைகள் ஆர்வலருமான அருட்தந்தை சக்திவேல் நிகழ்த்தவுள்ளார். கொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் எஸ். இந்திரகுமார் சிறப்புரையாற்றவுள்ளார். ஊடகவியலாளரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பேரவை உறுப்பினருமான கே. பொன்னுத்துரை வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.
ஆய்வுரையின் பின்னர் நூல் பற்றிய சிறப்புக் கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளது.
மலையகத் தமிழர்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள், அந்த மக்களின் வாழ்வியல் முறைகள், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் மலையகத் தமிழ் மக்களின் பங்களிப்பும் உணர்வுகளும் இந் நூலின் முக்கிய கட்டுரைகளாகும்.
நூலுக்கான அணிந்துரையை பேராசிரியர் சோ.சந்திரசேகரமும், முகவுரையை பத்திரிகையாளர் அ.நிக்ஸனும் எழுதியுள்ளனர்.
மலையகத்தில் புசல்லாவை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த வதரன் கிருஸ்ணா, ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர். தற்போது கனடாவில் வாழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
