தேர்தல் தேவையா -மக்களே தீர்மானிக்கவேண்டும் - அமைச்சரின் கருத்து இது
நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் வேளையில் நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டால், நாட்டு மக்கள் பிரிந்து செல்வார்கள் எனவும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தேவையற்றது எனவும் புத்தசாசன, சமய, கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் இந்து ஆலயத்தில் இன்று (15) இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் தின நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க,
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மீண்டதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தேவையா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரி விதிப்பினால் நாட்டில் உள்ள சமத்துவ மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க விவசாயம், தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை கைத்தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
நாட்டு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்கி அனைவருக்கும் சமமான, நியாயமான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏறக்குறைய 200 ஆண்டுகளாக தேயிலை பொருளாதாரத்திற்கு சிறந்த சேவையை வழங்கி வரும் தொழிலாளர்களின். பொருளாதார நிலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எந்த அரசாங்கமும் சரியாக செயற்படவில்லை எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.