யுத்தக் குற்ற விவகாரம் - அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்
இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெறவில்லை என யுத்தக் குற்றச்சாட்டு குறித்த விசேட நிபுணர்கள் குழு கூறியிருந்த போதும், நல்லாட்சி அரசாங்கமே ஜெனிவாவில் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஏற்றுக்கொண்டனரென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekera) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கருத்துச் சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,
''ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை இலக்கு வைத்தே எதிர்க்கட்சியினரின் ஜெனீவா நகர்வுகள் காணப்படுகிறது.
யுத்தக் குற்றச்சாட்டு குறித்த விசேட நிபுணர்களான டெஸ்மன் டி சில்வா, ஜெப்ரி நைஸ், மைக்கல் கிரேக், மைகள் நியூட்டன், ஜோன் ஹோம்ஸ், ரொபின் நிக்சன் ஆகிய ஆறுபேர் கொண்ட குழுவினர் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தனர். யுத்தக் குற்றச்சாட்டுகள் பொய்யென சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தும், நல்லாட்சி அரசாங்கம் அதனை நிராகரித்து யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கியது.
எனவே இப்போதும் ஜெனிவா விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை இலக்கு வைத்தே நகர்த்தப்படுகின்றது.
இனியாவது நாட்டை காட்டிக்கொடுக்கும் விதமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்” என வலியுறுத்தியிருந்தார்.
