வங்கக் கடலில் தாழமுக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு நாளை (08) மாலை 3 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி வளிமண்டலத்தில் கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளது.
சூறாவளி
இந்த நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, 5 - 10 வடக்கு அட்சரேகைகள், 90 - 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 - 4 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 - 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம் என மீனவ மற்றும் கப்பற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.