குற்ற இடங்களை காணொளி எடுப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
குற்ற இடங்களுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது ஆதாரங்களை சிதைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது என குற்ற இடப் புலனாய்வுப் பயிற்சிப் பிரிவின் பொறுப்பதிகாரி சாமர விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பேணுவது தொடர்பாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து சாமர விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில், “அங்கீகரிக்கப்படாத நபர்கள் புகைப்படம் எடுப்பதாலோ அல்லது காணொளி எடுப்பதாலோ மிக முக்கியமான தடயவியல் ஆதாரங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது.
புலனாய்வுப் பணிகள்
தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள குற்ற இடப் புலனாய்வு அதிகாரி (SOCO) பிரிவுகள், நவீன தொழில்நுட்பங்களுடன் புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுமக்கள் தன்னிச்சையாக ஆதாரங்களைத் தொடுவதாலோ அல்லது இடத்தை அசுத்தப்படுத்துவதாலோ இவர்களின் விசாரணை பாதிக்கப்படுகின்றது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவது அவர்களின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாகும்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
இந்தநிலையில் குற்ற இடங்களுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது ஆதாரங்களை சிதைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. குறிப்பாக கொலை போன்ற பாரிய குற்றங்களில் ஆதாரங்களை சிதைப்பவர்களுக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

குற்ற இடங்கள் எவ்வளவு குழப்பமாகத் தெரிந்தாலும், புலனாய்வு அதிகாரிகள் வரும் வரை எதையும் மாற்ற வேண்டாம். காவல்துறை அதிகாரிகள் தமது கடமையை செய்ய முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அத்துடன் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், உண்மையான ஆதாரங்கள் சிதையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |