மகாசங்கத்தை அவமதித்த அமைச்சர் லால்காந்த :அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் மற்றும் அவமதிக்கும் வகையில் அமைச்சர் லால் காந்தா கருத்துக்களை கூறியதற்காக அரசாங்கம் அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், விரைவில் பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்கப் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய லியான்வல சாசனாரதன தேரர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டி -மடவலயில் உள்ள ஜனமங்கலராமய சர்வதேசபௌத்த மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மகாசங்கத்தினரை இப்படி அவமதித்ததில்லை
அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வளவு அவமதித்ததில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அநீதி, ஊழல் மற்றும் சட்ட மீறல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் வரலாற்று ரீதியாக குரல் கொடுத்துள்ளனர். தவறுகளை சவால் செய்ய மதகுருமார்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது.
கருத்துக்களை விரைவாக மீளப்பெற வேண்டும்
அமைச்சர் லால்காந்த தனது கருத்துக்களை விரைவாக மீளப்பெற வேண்டும். ஜனாதிபதி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் , அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டின் உறுதித்தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.

இந்தப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால், பொதுமக்களின் எதிர்வினை தவிர்க்க முடியாதது. நாட்டின் கலாசார மற்றும் மத விழுமியங்களுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும் தவறின் நாட்டு மக்கள் மிக விரைவாக பதிலளிப்பார்கள், ”என்றும் அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |