மதவாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள்..! தீவிர விசாரணை
மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (25.10.2026) கண்டுபிடிக்கப்பட்ட மகசின்கள் மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மகசின்கள் மற்றும் தோட்டாக்கள் சுமார் ஒரு மாதமாக குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருட்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிருள்ள தோட்டாக்கள்
நேற்று முன்தினம் (25.10.2026) மாலை மதவாச்சி, வஹாமலுகொல்லாவ பகுதியில் இரண்டு T-56 மகசின்களும் 41 T-56 உயிருள்ள தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.

மதவாச்சி காவல் பிரிவின், வஹாமலுகொல்லாவ பகுதியில், மஹாகனதரவிலிருந்து இகிரிகொல்லாவ வரை செல்லும் கால்வாய் வீதியில் நீர் நிரம்பிய பள்ளத்தின் அருகே இவை கண்டுபிடிக்கப்பட்டன.
அன்று மாலை கால்வாயில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு குழு இதனை அவதானித்து மதவாச்சி காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தைப் பரிசோதித்த காவல்துறையினர், கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணை
குறித்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இராணுவ கிராமம் ஒன்று உள்ளதாகவும், அங்கு உள்நாட்டு போரின் போது ஊனமுற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு குடியேறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த கிராமத்தில் வசிப்பவர் ஒருவர் பொருட்களை கால்வாயில் கொட்டியிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது ஒரு திட்டமிட்ட குற்றத்திற்காக கொண்டு வரப்பட்டவையா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இது தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்