ஹோட்டல் உரிமையாளர் மறைத்து வைத்த ஆயுதங்கள் சிக்கின
கொரககொட, பலப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் மீட்கப்பட்டதுடன் இதனுடன் தொடர்புடைய இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பலாங்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட பலப்பிட்டிய, மிகெட்டுவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, அஹுங்கல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பலப்பிட்டிய, கொரககொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படை வெளியிட்ட தகவல்
கைது செய்யப்பட்டசந்தேகநபர்கள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொட மற்றும் அஹுங்கல்ல காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலப்பிட்டிய, மிகெட்டுவத்தையைச் சேர்ந்த சுதத் சில்வா (வயது 49) என்ற சுற்றுலா ஹோட்டல் உரிமையாளரும், பலப்பிட்டிய, கொரககொட பகுதியைச் சேர்ந்த ருமேஷ் தர்ஷன (வயது 37) என்ற தச்சுத் தொழிலாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் முதலாம் சந்தேக நபருடையது எனவும், இரண்டாவது சந்தேகநபரின் வீட்டில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தமையும் காவல்துறை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
பின்னணியில் குற்றச்செயலா
விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் கட்டளைத் தளபதி காவல்துறை பரிசோதகர் ஜீவக பண்டாரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஏதேனும் குற்றம் செய்யும் நோக்கில் வைத்திருந்தனவா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என அஹுங்கல்ல காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் ஹரித் ஹல்விட்ட தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இரண்டாவது சந்தேக நபர் சுமார் 02 வருடங்களுக்கு முன்னர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக அஹுங்கல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.