தாக்குதல் முயற்சி : முற்றாக மறுக்கும் தேர்தல் ஆணைக்குழு
(புதிய இணைப்பு)
வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவலில் எவ்வித உ்மையும் இல்லையென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுதந்திரமான மற்றும் அமைதியான வாக்கெடுப்பை சகித்துக்கொள்ள முடியாத சிலர் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடியை தாக்க தயாராக வைத்திருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருந்ததாக கூறப்படும் பாரவூர்தி ஒன்றில் நேற்று (13) நடத்தப்பட்ட சோதனையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ரி-56 ரக தோட்டா, துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பாரவூர்தியின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாரவூர்தியின் மேல் பகுதியில் கிடந்த ஆயுதங்கள்
பாரவூர்தியில் ரி-56 துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்தை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக காவல்துறை அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமைய சூரியவெவ காவல்துறையினர் உடனடியாக செயற்பட்டு மேற்கொண்ட விசாரணைகளின் போது பாரவூர்தியின் மேல்பகுதியில் மெழுகு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் என்பவற்றை கண்டுபிடித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
குறித்த ஆயுதங்களை பிரதேசவாசிகள் மறைத்து வைத்திருந்தனரா அல்லது ஏதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக யாரேனும் இந்த ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பாரவூர்தி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |