விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்
மட்டக்களப்பு கரடியனாறு மற்றும் சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள பகுதிகளில் இருந்து நேற்று (12) மாலை வெடிமருந்துக்கள் மற்றும் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்திவெளி காவல்துறை பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் மறைத்துவைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாகி ஒன்றையும் 8 ரவைகளையும் மீட்டனர்.
அதேவேளை கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள சின்ன புல்லுமலை வயல்பகுதியில் உழவு இயந்திரத்தால் வயலை உழுதபோது பரல் ஒன்றின் மூடி வெளியே வந்தததையடுத்து நிலத்தை தோண்டியபோது நிலத்தில் புதைத்துவைக்கப்பட்ட பரல் ஒன்றில் வெடிபொருட்கள் இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி
இதனையடுத்து காவல்துறையினர் பரலில் இருந்து பாதுகாப்பாக பொலித்தீனில் சுற்றப்பட்ட பெருமளவிலான வெடி மருந்துக்களை மீட்டுள்ளனர்.
இந்த பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி என்பதுடன் மீட்கப்பட்ட வெடி மருந்துககளை நீதிமன்ற உத்தரவினை பெற்று செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.