இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை..! அபாய எச்சரிக்கை விடுவிப்பு
வடக்கு கிழக்கு உட்பட நாடாவிய ரீதியில் நீடிக்கும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வட மாகாணத்தில் அடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றைய வானிலை
இன்றைய வானிலை தொடர்பில் வெளிவந்த தகவலின் படி, மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஏறத்தாழ 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
காலி மாவட்டத்தில் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், காலி மாவட்டம் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. கனமழை காரணமாக ஜின் கங்கையின் நீர்மட்டம், வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவிற்கு உயர்வடைந்துள்ளது.
நேற்று சனிக்கிழமை அதிகரித்துவந்த களுகங்கையின் நீர்மட்டம் இன்று காலை முதல் குறைய ஆரம்பித்துள்ளது.
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
இந்த நிலையில் வடக்கு மேற்கு, சப்ரகமுவ, மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலிலும், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலும் நீராடும் போது அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
