வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி! புயலாக மாற வாய்ப்பு - முக்கிய அறிவித்தல்
நாளை (19) யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக்ததின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவொன்றில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேலடுக்கு சுழற்சி
இன்று (18) மணி மத்திய வங்காள விரிகுடாவில் முல்லைத்தீவுக்கு கிழக்காக 1100 கி.மீ. தூரத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியானது நாளை மறுதினம் (20.10.2022) அளவில் தாழமுக்கமாக மாறும் வாய்ப்புள்ளது.
இது மேலும் விருத்தியடைந்து 22.10.2022 அல்லது 23.10.2022 அளவில் நடுத்தர அளவிலான புயலாக மாறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு.
புயலாக மாறுவதற்கு வாய்ப்பு
இது புயலாக மாறினால் வடக்கு வடகிழக்கு திசை நோக்கியே ( இந்தியாவின் ஒடிசா அல்லது மேற்கு வங்கம்) நகரும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இன்று இரவு முதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு வெப்பச் சலன செயற்பாடும் காணப்படுகிறது. எனவே கடுமையான இடிமின்னல் நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு” என்றுள்ளது.
