நல்லூர் கந்தன் ஆலயத்தில் இராணுவ அத்துமீறல்: மக்கள் விசனம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.
இதன்போது நல்லூர் ஆலய முன் வாயிலால் திடீரென ஒரு இராணுவ வாகனம் உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அத்துமீறி உள்நுழைந்த வாகனம்
நல்லூர் திருவிழா காலத்தில் குறித்த பகுதியில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் செல்வதற்கும் அனுமதி இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தினரின் குறித்த வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இராணுவத்தின் அடாவடி இன்னமும் தொடர்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதேவேளை கடந்த வருடமும் யாழ். நல்லூர்ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பு. கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



