இலங்கையை தொடர்ந்தும் வாட்டும் காலநிலை சீர்கேடு - வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற தமிழர்கள்! பதற வைக்கும் காட்சி
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.
மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா இராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நால்வர் உயிரிழப்பு
நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹட்டன்- பன்மூர் குளத்தில் தவறி விழுந்து எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், பொல்பிட்டிய, ஹிதினேகம பிரதேசத்தில் நேற்று முன்பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியும், 62 வயதான பெண் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 648 பேர் பாதிப்பு - 3 பேர் மாயம் (VIDEO) |
மூவர் காணாமல் போயுள்ளனர்
இதேவேளை, நாவலப்பிட்டி அக்கரவத்தை பகுதியில் கடம்புலவ ஆற்றை கடக்க முயன்ற இரு ஆண்களும் பெண் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அனர்த்தங்கள் காரணமாக 1,766 குடும்பங்களைச் சேர்ந்த 7,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில்
மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் மலையக தொடருந்து சேவைகள் ரத்து |
மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்தும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



