அடுத்த 24 மணி நேரத்திற்குள் உருவாகப்போகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ள ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்று (09) பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இன்று(09) மாலை 4.30 மணிக்கு வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும், நாளை (10) மாலை திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கை கடற்கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளையே கரையைக்கடக்கும்
இதற்கிடையில், ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலையின் வேகம் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், இன்று அது இலங்கைக்குள் நுழையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், அது மாறிவிட்டது என்றும் வளிடண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும்
வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில் இது 70 கி.மீ வேகத்திலான கடும் காற்றாக அதிகரிக்கலாம். வடமேல், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 15 மணி நேரம் முன்