9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றையதினம் களுத்துறை மாவட்டத்தில் 200 மில்லி மீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு , 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய 9 மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த மாவட்டங்களில் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
கொழும்பு , காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் சீதாவாக்கை பிரதேச செயலகப்பிரிவிற்கும் , காலியில் நெலுவ பிரதேச செயலகப்பிரிவிற்கும் , களுத்துறையில் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் , மாத்தறையில் பிட்டபெத்தர பிரதேச செயலகப்பிரிவிற்கும் , நுவரெலியாவில் வலப்பனை பிரதேச செயலகப்பிரிவிற்கும் , இரத்தினபுரியில் அயகம, குருவிட்ட, எஹெலியகொட மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.