மீண்டும் தீவிரமடைகிறது "மொக்கா " புயல் - நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்..!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து இன்று (11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் கடந்த 8-ம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது.
தொடர்ந்து, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்தது. நேற்றுக் காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இன்று தீவிர புயல்
வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு யெமன் நாடு பரிந்துரைத்த ‘மொக்கா ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது படிப்படியாக தீவிரமாகி இன்று (11) காலை தீவிரப் புயலாகவும், நள்ளிரவில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
தொடர்ந்து, வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி, மே 13 முதல் வலு குறைந்து, மே 14-ம் திகதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக் கூடும்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 130 கிலோமீட்டர் வேகத்திலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி, தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் அடுத்த 3 நாள்களுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை நிலையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
