வட கிழக்கில் மூடப்படும் நலன்புரி நிலையங்கள்: இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யாழ். மாவட்டத்தில் 3 நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 ஆகும்.
வீடுகள் வழங்க நடவடிக்கை
மேலும், இடம்பெயர்ந்த 1,502 குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் இல்லாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அதேவேளை, 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்படும்.
ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரை
அது மாத்திரமன்றி, காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படவுள்ளதன் காரணமாக குறித்த நலன்புரி நிலையங்கள் மூடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |