முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்கு காரணமானவர்களே பலஸ்தீனர்களை கொல்ல கைகோர்ப்பு : பகிரங்க குற்றச்சாட்டு
முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்கு வழிகோலிய, யுத்தத்திற்கு ஆதவளித்தவர்களே இன்று பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(16) புறக்கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு - தெற்கு ஒருங்கமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நிராயுதபாணியான பலஸ்தீன மக்களை படுகொலை செய்யும் இஸ்ரேலுடன் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கைகோர்த்துள்ளதாகவும் வடக்கு - தெற்கு ஒருங்கமைப்பின் அழைப்பாளர் சிறீநாத் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன அழிப்பு நடவடிக்கை
காசா மீது கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படும் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் கருத்தை வெளிக்காட்டும் வகையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன அழிப்பு செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என உலகளாவிய ரீதியாக எழுந்துள்ள கோரிக்கைக்கு இலங்கை மக்களின் ஆதரவை ஒருங்கிணைக்கும் வகையிலும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தினர், வைத்தியசாலைகள், அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளதுடன், 4 ஆயிரத்து 500 ற்கும் அதிகமான சிறார்களை படுகொலை செய்துள்ளதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வடக்கு தெற்கு ஒருங்கமைப்பின் அழைப்பாளர் சிறிநாத் பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் நடத்திய யுத்தத்திற்கு ஒப்பான தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய எதிர்ப்பு
ஹிட்லருக்கு எதிராக உலகளாவிய ரீதியில் எதிர்ப்புகள் எழுந்தது போன்று, இந்த யுத்தத்தை தற்போது முன்னெடுக்கும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவிற்கு எதிராகவும் உலகளாவிய எதிர்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த செல்வந்த தலைவர்கள், பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவுடன் இணைந்து, பலஸ்தீன மக்களுக்கு எதிராக பாரிய இன அழிப்பை மேற்கொண்டுவருவதாகவும் சிறீநாத் பெரேரா சுட்டிக்காட்டினார்.
இந்த யுத்தத்திற்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தினர் யுத்தக் குற்றவாளிகள் எனவும் சுயாதீன தீர்ப்பாயம் ஊடாக ஹிட்லரின் இராணுவத்தினருக்கு எதிராக விசாரணை செய்தது போன்று, இஸ்ரேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை சுயாதீன தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் நிறுத்தப்பட்டு, பலஸ்தீன மக்கள் தமது நிலத்தில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் சிறிநாத் பெரேரா கூறியுள்ளார்.