இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு கிடைத்தது அங்கீகாரம்
இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை முன்னெடுத்து வரும் தேசிய மட்டத்திலான முயற்சிக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது கூட்டத் தொடரின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் எம். பீஸ்லி தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு டேவிட் எம். பீஸ்லி அனுப்பிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மூலோபாயத் திட்டம்
இலங்கையின் மூலோபாயத் திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இது அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்திற்க்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்புக்கு ஏற்ப மூலோபாயத் திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குக்கிணங்க, 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கின் இலக்கை அடைவதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறை
இந்த நிலையில் உணவுப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மோசமான நிலையை குறுகிய காலத்தில் குறைப்பதற்காகவும், நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமையை முன்னேற்றுவதற்காகவும் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை உலக உணவுத் திட்டம் வரவேற்றுள்ளது என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் எம். பீஸ்லி தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றம் போஷாக்கிற்காக அரசாங்கம் செய்துள்ள முதலீட்டின் மூலம் கிடைக்கும் பலனை பன்மடங்கு அதிகரிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கை ரீதியான ஆலோசனைகளை வழங்க உலக உணவுத் திட்டம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
