எரிபொருள் விலையேற்ற விவகாரம்! ஓடி ஒழிந்தாரா சாகர காரியவசம்
ஒருவரது அல்லது அமைச்சரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.
இந்த தீர்மானமானது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை மிகவும் ஆழமாக கலந்துரையாடி விருப்பமின்றி எடுக்கப்பட்ட தீர்மானம்.
எவ்வாறாயினும் தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் விதம் குறித்து ஜனாதிபதியுடடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் எனவும் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.
இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் இதன் மூலம் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக கட்சியின் சார்பில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.