அம்பிட்டிய போன்ற பேரினவாதிகள் எதனை விரும்புகின்றனர்...
“அனைத்துத் தமிழர்களையும் வெட்டுவேன்… அப்போது என்ன செய்வார்கள்..” என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பேசிய பேரினவாத பேச்சு ஊடகங்களில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
மாயான விவகாரத்திற்காக இப்படி பேசினாலும் மண்ணாக்கிரமிப்பை மனம்கொண்டே அவர் இப்படி கொந்தளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுக்கும் வகையில் பேசியும் நடந்தும் வரும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர், எந்த விடயமாக இருந்தாலும் பேரினவாத அராஜகத்துடன் நடந்துகொள்வது வழக்கமாகிற்று.
தமிழ் மக்களை ஒடுக்கும் வகையிலும் அவர்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் வகையிலும் அமையும் பேச்சுக்கள் இலங்கையில் எதை சாதிக்கின்றன? இந்த நிலையில் நில ஆக்கிரமிப்புக்காக பசுக்களை கொன்றவர்கள், இப்போது மனிதர்களையும் கொல்லுவோம் என்ற நிலைக்கு வருகின்றனர்.
எம்மை நாம் ஆள வேண்டும்
ஈழத் தமிழ் மக்கள் தமது தாயகத்தை ஆள வேண்டும், தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்க வேண்டும் என்று கடந்த எழுபது வருடங்களாக போராடி வருகிறார்கள். அகிம்சை வழியில் நடந்த போராட்டங்களுக்கும் சிங்கள அரசு எந்த மதிப்பையும் பதிலையும் வழங்கவில்லை.
அதேவேளை அகிம்சைப் போராட்டங்களுக்கு வன்முறையும் போருமே பதிலாகவும் தீர்வாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட கசப்பான அனுபவத்தை நாம் சந்தித்துள்ளோம்.
1958களில் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக தமிழ் தலைவர்கள் உண்ணா விரதப் போராட்டம் நடாத்திய வேளை கொத்துக்கொத்தாக ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலை வாயிலாக அழிக்கப்பட்ட துயரமான வரலாற்றைக் கண்டிருக்கிறோம்.
சுதந்திர இலங்கை எனப்பட்ட நாட்டில் ஈழத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டமையே தனி நாடு பற்றிய சிந்தனைக்கு வேரானது.
மொழி உரிமையை மறுத்தமை, கல்வி உரிமையை மறுத்தமை, தொழில் உரிமையை மறுத்தமை, நிர்வாகத்தில் சிங்கள ஆதிக்கம் என ஒடுக்குமுறைகள் பல முகங்களை வெளிப்படுத்தியது.
ஒடுக்குமுறைகள் பல கரங்களால் ஈழத் தமிழ் மக்களின் கழுத்தை திருகியது. அன்று பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலைக்காக ஈழத் தமிழ் மக்கள் தமது பேருழைப்பை நல்கிய போதும், சிங்கள தலைவர்களின் விடுதலைக்கு ஈழத் தமிழ் தலைவர்கள் உதவிய போதும் பேரினவாதம் தனது ஒடுக்குமுறை முகத்தை மாற்றாமல் இன நல்லிணக்கத்தை குழியிற் புதைத்தது.
தமிழீழ நிழலரசு
இந்த நிலையில் தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த அகிம்சைப் போராட்டங்களுக்குப் பின்னரான பேச்சு முயற்சிகளும் ஒப்பந்தங்களும் தீர்வுகளைத் தராத நிலையலி் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மேலும் மேலும் இனவன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிலையில்தான் வன்முறையால் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த அடிப்படையில் தான் தனித் தமிழ் ஈழத்திற்காக ஆயுதப் போராட்டம் முகிழ்ந்தது.
பல்வேறு இயக்கங்கள் உருவாக்கம் பெற்று ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களின் பேராதரவைப் பெற்றதுடன் தீர்க்கமான வகையிலும் மக்களுக்கு உண்மையான வழியிலும் தமது பயணத்தை மேற்கொண்டது.
சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளற்ற தமிழீழ நிழல் அரசொன்றை வடக்கு கிழக்கில் புலிகள் இயக்கம் உருவாக்கியது. அப்படியான ஈழத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. நில ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டது. புத்தர் சிலைகளை நிறுவ பேரினவாத பிக்குகள் நுழைய முடியாதிருந்தனர். தொல்லியல் திணைக்களம் தமிழர் தாயகத்தில் நுழைந்து தமது ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்றவர்கள் தமிழர்களின் நகரங்களில் வந்து தமிழர்களை வெட்டுவேன் என்று அச்சுறுத்தும் விதமாக பேச முடியாத நிலையிருந்தது.
ஈழத் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் விடுதலையும் கொண்ட தேசம் ஒன்று அன்று வடக்கு கிழக்கில் அரசாய் இருந்தது. அன்று காடுகளுக்கும் மரங்களுக்கும் பசுக்களுக்கும்கூட தமிழ் ஈழத்தில் பாதுகாப்பு இருந்தது.
கால்நடைகளுக்கு எதிரான போர்
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ந்து மட்டக்களப்பு மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினை இன்னமும் அங்கே நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மயிலத்தமடு பண்ணையாளர்களும் தொழிலாளர்களும் தமது பாரம்பரியத் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள். மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடுவில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாத பேரினவாதத்தின் கால்நடைகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை சுமன ரத்தின தேரர் போன்றவர்கள் செய்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கு வேளாண்மை என்பது முக்கியமான வருவாயைத் தருகின்ற தொழில். அது மட்டக்களப்புக்கு மாத்திரமின்றி, வடக்கு கிழக்கிற்கு மாத்திரமின்றி இன்று இலங்கைத் தீவுக்கே பயன் தருகின்ற தொழில்.
சுமார் ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் தரைப்பகுதியில், சுமார் இரண்டரை லட்சம் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படும் நிலையில் எல்லைப் பிரதேச சிங்கள ஆக்கிரமிப்பால் மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மாத்திரமின்றி கால்நடைகளுக்கும் பாரிய அச்சுறுத்தல்களும் சேதங்களும் வன்முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன.
பசுக்களுக்கும் பாதுகாப்பான தேசம்
அண்மைய ஆண்டுகளில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. இலங்கைத் தீவு முழுவதும் மக்கள் வரிசைகளில் பொருட்களுக்காக நின்றுகொண்டிருந்தார்கள். பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களின் கழுத்தை திருகியது. இன்றும் அந்த நிலைதான் தொடர்கின்றது.
பாடசாலை சென்ற குழந்தைகள் பசியில் மயங்கிய வேளை, அவர்கள் உணவின்றி தேங்காய் சொட்டுக்களையும் மாங்காய் துண்டுகளையும் உண்டு வந்தார்கள் என்று அறிந்த வேளை ஈழத் தமிழ் மக்களும் வேதனைப்பட்டார்கள். அத்துடன் அன்றைய நாட்களில் குழந்தைகள் பால்மா இன்றி கதறிய பேரழுகை எல்லோருக்கும் கேட்டது.
பால் தரும் பசுக்களை ஈழத் தமிழ் மக்கள் தெய்வங்களாக வழிபடுகிறார்கள். அத்துடன் பண்டைய காலம் தொட்டு பசுக்களை செல்வங்களாகவும் தமிழர்கள் மதிக்கிறார்கள்.
உயிர்மை நேயத்தை வெளிப்படுத்தும் பசுக்கள் தமது பாலை குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் இரந்து தருகின்றன. அத்தகைய பசுக்கள்மீது வன்முறைகளை மேற்கொள்வது எவ்வளவு பெரிய அநீதியாக இருக்கும். அத்தகைய பசுக்கள் மேயும் மேய்ச்சல்தரைகளை அழிப்பதும் தீயிடுவதும், பசுக்களை சுட்டுக்கொல்வதும் மிகப் பெரிய வன்முறை மாத்திரமல்ல மிகப் பெரிய உயிர்மை நேயத்திற்கு எதிரான பழி. அது பாவத்திற்கும் விளைவிற்கும் உரியது.
இப்படி செய்வதுதான் இலங்கைத் தீவின் குழந்தைகள் பாலுக்கு அழும் பேரழுகையை உண்டு பண்ணுகிற நிலையை உருவாக்குகிறது.
போரில் கொல்லப்பட்ட பசுக்கள்
இதேவேளை இலங்கை அரசு போரின் போது பசுக்களை கொல்வதை ஒரு தொடரச்சியான உயிர்மைநேய அழிப்பாக செய்து வந்தது. 1996ஆம் ஆண்டு கடுமையான சண்டை. சத்ஜெய எனப்பெயரிடப்பட்ட போரின் இடப்பெயர்வின் போது கிளிநொச்சி கோணாவில் பகுதியில் ஒரு பெரிய காணியில் இடம்பெயர்ந்த பசுக்கள் தரித்து நின்றன. அதற்குப் பக்கத்தில் நாங்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்தோம். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து அரச படைகள் எறிந்த எறிகணைகள் வந்த பசுக்களின் பட்டியில் வந்து விழுந்தன. அத்தனை பசுக்களும் மண்ணில் சரிந்து கிடந்தன. என் நடுகல் நாவலில் இந்தக் காட்சியை பதிவு செய்திருப்பேன்.
குருதி வெள்ளத்தில் சரிந்த பசுக்களின் அச்சத்தில் உறைந்த அந்தக் கண்கள் இன்றளவும் நினைவில் மிதக்கின்றன.
இதேபோல 2006இல் நான்காம் ஈழப் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 2008.12.24ஆம் திகதி நடந்த அரச படைகளின் தாக்குதலில் 85 மாடுகள் ஒரு சில கணங்களில் அழித்தொழிக்கப்பட்டன.
போரின் நிலமெங்கும் மனிதர்களுடன் கால்நடைகளும் அழிக்கப்பட்ட காட்சிகள் நாம் காணாத காலங்கள் இல்லை எனலாம்.
அப்படி வடக்கு கிழக்கில் உள்ள மரங்கள்மீதும் கால்நடை உள்ளிட்ட விலங்குகள்மீதும் கூட வன்முறைகளை செலுத்துகையில் குழந்தைகள் பாலுக்கு அழும் தேசத்தைதானே அறுவடை செய்ய முடியும்?
இப்போதும் அதே வன்முறையை தொடர்வதன் வாயிலாக இன்னமும் இந்த தேசத்தில் துயரத்தை பெருக்கத்தான் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்ற பேரினவாதிகள் விரும்புகின்றனரா?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
