கறுப்பு அங்கி பாதுகாப்புடன் சிறிலங்கா நுழையும் கோட்டாபய! ஏற்பாடுகள் தடல்புடல்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கோட்டாபயவின் சிறிலங்கா வருகை
இன்னும் 11 நாட்களில் அவர் நாட்டுக்கு வருவார், அவருக்கு கறுப்பு நிறத்திலான பாதுகாப்பு பிரிவு வழங்கப்படும். முன்னாள் அதிபர் அந்தஸ்தும் இருப்பதால் அவர் இலங்கைக்கு வந்து தங்கியிருந்து, நாட்டினுள் பிரவேசிப்பதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது.
அவர் தனது சொந்த மாளிகையான மிரிகானை சென்று முள்வேலிகளால் பாதுகாப்பு வேலி அமைத்து அங்கு இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அவர் நாட்டுக்கு வந்தாலும், நாட்டினுள் பயணிப்பதற்கு அல்லது அவரது செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்காது.
ஏனெனில் அதற்கான செயற்பாடுகளை, அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றார். அதற்கான ஒப்பந்தங்களும் ஏலவே செய்யப்பட்டிருக்கின்றது.
கோட்டாபய தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு
இது ஒருபுறமிருக்க, கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான சாட்சிகள் டெல்லியில் பத்திரமாகவே இருக்கின்றன.
எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக விரோதமாக இவர் செயற்பட்டால் ஏதாவது ஒரு வகையில் சிக்குவார். யுத்தக் குற்றவாளியாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவுடன் ஒட்டி உறவாட வேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது.
கோட்டாபய என்ற ஒரு தனி மனிதன் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை இந்தியா தெட்டத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது எனவும் அவர் கூறுகிறார்.
