மத்திய கிழக்கு போர் எப்போது முடிவடையும்... முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து, அநுர அரசாங்கம் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடமே வினவ வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று (12) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டு வர ஜூலி சங் பாடுபட்டதால், போர் எப்போது முடியும் என்பதை அவரிடமே கேட்க வேண்டும்.
எரிபொருள் கையிருப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி, உள்நாட்டில் விலையை உயர்த்தியதன் மூலம் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இது ஏனைய பொருட்களின் விலையேற்றத்திற்கும் பணவீக்கத்திற்கும் வழிவகுக்கும். எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், விலை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் முன்பு கூறியிருந்தனர்.
ஆனால், தற்போது மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள் விலைகளை அரசாங்கம் பாரியளவில் அதிகரித்துள்ளது. பழைய விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகளை புதிய அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம், இந்த அரசாங்கம் ஒரு 'கறுப்புச் சந்தை முதலாளி' போல நடந்துகொள்கிறது.
மத்திய கிழக்கு போரை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு, மக்கள் மீது அதிக வரிச் சுமைகளை ஏற்றி அவர்களை அரசாங்கம் சுரண்டி வருகின்றது. அதேபோன்று ஜனாதிபதி சாதாரண மக்களிடம் போர் பற்றி கேட்பதை விடுத்து, தனது நண்பர்களான ஜூலி சங் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரிடமே அது பற்றி கேட்க வேண்டும்." என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |