ஹமாஸுக்கு அனுப்பப்படும் கோடிக் கணக்கிலான பணம்: பின்னணியில் உள்ள நாடுகள்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிருக்கும் இடையிலான போர் ஒருமாதத்தை கடந்துள்ளது. ஆனால், மிகப்பெரிய அமைப்பான ஹமாஸுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? அதன் பின்னணியில் உள்ள நாடுகள் யார்? அமைப்புகள் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் ஒரே நேரத்தில் 5000 இற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
அதன்போது, ஹமாஸ் அமைப்பிடம், ஏராளமான ஏவுகணை இருப்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
ஹமாஸிக்கு நிதியுதவி
அதேவேளை, ஹமாஸ் காசா பகுதியில் பணிபுரியும் சுமார் 50,000 ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் ஹமாஸ் செலவிடுகிறது.
இந்த மாத ஊதியத்தைத் தவிர, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், போரில் காயமடைந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஹமாஸ் நிதிஉதவியும் வழங்கி வருகிறது.
மேலும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, காசாவின் ஆண்டு பட்ஜெட் இந்திய ரூபாய் மதிப்பில் 5794.60 கோடி. காசா பகுதியில் உள்ள அரசாங்கத்துடன், ஹமாஸ் ஆயுதக்குழுவும் பல வழிகளில் நிதியுதவி பெற்று வருகிறதாக தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாக ஆதரவு
அதனைத் தவிர, பல்வேறு நாடுகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் முதலீடு செய்து, அதன் மூலமும் பணம் சம்பாதிக்கின்றனர்.
அதன்படி ஈரான், கத்தார், குவைத், துருக்கி, செளதி அரேபியா, அல்ஜீரியா, சூடான் மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஆதரவளித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸிற்கு பொருளாதார மற்றும் அரசியல் நிதி உதவி வழங்கும் நாடுகளில் கத்தார் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் ஒவ்வொரு மாதமும் கத்தாரிடமிருந்து இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 248 கோடி ரூபாய் பெறுவதாக சர்வதேச நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து ஆராயும் ஐஆர்ஐஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டிடிடா பெல்லோன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
