கடத்தப்பட்டாரா ஜனாதிபதி கோட்டாபய? தென்னிலங்கையில் வெளிவந்த தகவல்
பௌத்த தேரர்கள் பலர் ஒன்றிணைந்து பதவிக்கு கொண்டுவந்த, தைரியமாக தீர்மானங்களை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது காணாமல்போயுள்ளதாக, தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட சிங்கள ராவய அமைப்பின் எல்லே குணவன்ச தேரர், எவருக்கும் அஞ்சாது தீர்மானங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விடயங்களில் முறையற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் பதவிக்கு கொண்டுவந்த கோட்டாபய ராஜபக்சவா இன்று அதிகாரத்தில் இருக்கின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கடத்திச் சென்று அவரைப்போல ஒரு உருவம் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
அல்லது அவரது மூளை கணனியால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவரைப்போல் முதுகெலும்புடன் தீர்மானம் எடுத்த தலைவர் என எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள் தெரிவு செய்த தலைவர் காணாமற்போயுள்ளாரா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
முன்னைய அரசாங்கம் தம்முடைய அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்கவில்லை. குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாடவிட்டதால் அவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கோ, இராணுவத்திற்கோ வழங்கவில்லை.
அதேபோன்றதொரு செயற்பாட்டையே தற்போதைய அரச தலைவரும் மேற்கொள்கின்றார். அவர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.